×

வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஒபெல்கா, பெகுலா வெற்றி

சின்சினாட்டி: சின்சினாட்டியில் நடந்து வரும் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரெய்லி ஒபெல்கா, மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெசிக்கா பெகுலா ஆகியோர் 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் வளர்ந்து வரும் வீரர் ரெய்லி ஒபெல்காவும், பிரான்ஸ் வீரர் காரென்டின் மோடெட்டும் மோதினர். முதல் செட்டில் இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடும் போராட்டத்திற்கு பின்னர் , முதல் செட்டை டை பிரேக்கரில் தனது அதிரடியான சர்வீஸ்கள் மூலம் 7-6 என ஒபெல்கா கைப்பற்றினார்.

2வது செட்டை 6-4 என மோடெட் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். 3வது செட்டில் ஒபெல்காவின் கை ஓங்கியது. அந்த செட்டை ஒபெல்கா 6-4 என கைப்பற்றி, மோடெட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஸ்பெயின் வீரர் ராபெர்ட்டோ பாடிஸ்டா அகட்டை 6-3, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரர்களான இத்தாலியின் மாட்டியோ பெரட்டினி, போலந்தின் ஹியூபர்ட் ஹர்காஸ் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெகுலாவும், இத்தாலியின் இளம் வீராங்கனை கமிலா ஜியார்ஜியும் மோதினர். டொரொன்டோ ஓபனில் கடந்த வாரம் மகளிர் ஒற்றையர்  அரையிறுதியில் பெகுலாவை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய, கமிலா அதில் பிளிஸ்கோவாவை நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஆனால் இப்போட்டியில் பெகுலாவிடம் எதிர்ப்பே இல்லாமல் 2-6, 2-6 என நேர் செட்களில் கமிலா தோல்வியடைந்து சோகத்தோடு வெளியேறினார்.

அமெரிக்க வீராங்கனை  கோகோ கவுஃப், ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மேடோவா ஆகியோரும் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப்போட்டிகளில் எளிதாக வென்று, 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ருமேனியாவின் சிமோனா ஹாலெப்  6-4, 3-6, 6-1 என போலந்தின் மக்டா லினெட்டை  வீழ்த்தினார்.

Tags : Western and ,Southern Open ,Obelka ,Begula , Western and Southern Open tennis: Obelka, Begula win first round
× RELATED சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்...